வாழ்வே தவம்
காரிருள் களைந்து கதிரவன் முளைத்து முக்கால் மணி நேரம் ஆகியிருந்தது.
ஏழு முறை கடிகாரம் டிங் டாங் என அடித்தது. jogging முடித்துவிட்டு வீட்டுக்குள் வந்த ஆதி, நேராகக் குளிக்கப் போனான். பதினைந்து நிமிடத்தில் வெளியே வந்தவன், தன் அறையில் சென்று தியானம் செய்ய அமர்ந்தான். அவனுக்கு இது தினமும் மன அமைதிக்கான வழக்கம் என்றாலும், இன்று நேரம் போனதே தெரியாமல் அமர்ந்திருந்தான். அவன் எழுந்திருக்கும் முன்பு அவனைப் பற்றி...
தனிமை விரும்பி. அவனது எல்லா வேலைகளையும் அவனே செய்து கொள்வான், சில பல ஆயிரம் கொடுத்து வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ளும் வசதி இருந்தும்.
நன்றாகச் சமைப்பான். பெரும்பாலும் காலை உணவாகப் பழங்களும் காய்கறிகளும் தான். அனைவருக்கும் நன்மை செய்யும் குணம். இனிமையாய்ப் பழகுவான்.
இதோ தியானத்திலிருந்து எழுந்து வந்தவன், சமையலறைக்குச் சென்று பழங்களைச் சாப்பிட்டுவிட்டு, கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
ஆதி சென்னை அரசு மருத்துவமனையில் குழந்தை நல மருத்துவராய் இருக்கிறான். இப்போது அங்குதான் சென்று கொண்டிருக்கிறான். சென்னையின் நெரிசலில் ஆதியின் வண்டி அவனைப் போலவே பொறுமையாய் ஊர்ந்து கொண்டிருந்தது. அவனது வாழ்வே தவ வாழ்வுதான். அரசியல்வாதிகள் சொல்லும் அந்தத் தவ வாழ்வெல்லாம் இல்லை. அன்பு மட்டுமே பெருக்கெடுக்கும் தவம்.
வழக்கமாக நெரிசல் இல்லாத சாலையில் கூட விரைந்து செல்லாதவன். தன்னால் யாருக்கும் எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதில் எக்கணமும் தெளிவாக இருப்பவன். போகும் வழியில் ஏதாவது விபத்தில் சிக்கியவர்களைக் கண்டாலும், அவர்களை மருத்துவமனை கொண்டு சென்று அவர்களுக்கு மருத்துவம் செய்து காப்பாற்றுவது வரை தனது கடமையாக நினைக்கக் கூடியவன். மருத்துவராயிற்றே. ஆனாலும், தனியாக clinic இல்லை. பெரும் சம்பளத்திற்கு அழைப்பு வந்தும், தனியார் மருத்துவமனைக்கும் செல்லவில்லை. இன்னமும் தன்னை வளர்த்து விட்ட சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தான் பணி புரிகிறான்.
மருத்துவமனை உள்ளே நுழைந்த ஆதியைப் பார்த்த அனைவரும் வணக்கம் சொல்ல, இவனும் பதில் வணக்கம் சொல்லியபடி குழந்தைகள் நல உள்நோயாளிகள் பிரிவுக்கு வந்தான்.
"Good morning, doctor" என்றாள் ப்ரியா. கல்லூரி காலத்தில் உடன் படித்தவள், இங்கு ஆதியின் கீழ் assistant surgeon ஆக இருப்பவள்.
பலருடன் ஒரே வகுப்பறையில் இருந்தாலும், சிலர் கண்களுக்கு நாம் தெரியவே மாட்டோம் அல்லவா? அப்படித்தான் ப்ரியாவும், ஆதியும். கல்லூரியின் இறுதி நாட்கள் வரை ப்ரியாவின் கண்களுக்கு ஆதி தெரியாதவனாகவே இருந்தான். வெறும் புறத்தோற்றம் கண்டு எடைபோட்டதாலோ என்னவோ? ஆனால், தனக்கு senior doctor ஆக ஆதியைக் கண்ட போது தான் முதன் முறையாக ஆதியைக் கண்டு வியந்தாள். 'எப்படி இப்படி ஒருவனைக் கண்டு கொள்ளாமல் இருந்தோம்' என ப்ரியா நினைக்காத நாளே இல்லை.
இப்போதும் அவளிடம் விருப்பு வெறுப்பு இல்லாமல், வேலையைப் பற்றி மட்டுமே பேசுவான் ஆதி. அது சில நேரம் அவன் மீது எரிச்சலை ஏற்படுத்தினாலும், அவனுடைய குணமே அதுதான் என்று அவளும் அறிந்திருந்தாள்.
இன்று ஆதியின் சீனியர் டாக்டர் தமிழின் குழந்தைக்கு brain tumour surgery. அதுக்காகத் தான் ஆதி மருத்துவமனை வந்திருக்கிறான். என்ன தான் தன்னுடைய குழந்தை என்றாலும், அதன் உயிருக்கு ஒன்று என்றதும் தமிழ் பெரிதும் நம்பியது ஆதியைத் தான். இரண்டரை மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடித்து வெளியே வந்த ஆதியைத் தமிழ் தன் கையெடுத்து வணங்க, தன் கைகளால் இறுக்கிப் பிடித்துப் புன்னகையோடு கட்டி அணைத்துக் கொண்டான் ஆதி.
-------------------------------------------------------------------
அன்று காலை தியானத்தின் போது, ஒரு நொடி தலை உச்சிக்குள் ஊசி குத்துவது போல உணர்ந்த ஆதி, அடுத்த நொடி அந்த வேறுபட்ட மனநிலையில் ஒன்றிப் போனான். அந்த மனநிலை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. மெல்ல மெல்லத் தன்னையறியாத் தவத்தினுள் மூழ்கித் தொடங்கினான்.
இரண்டு நாட்கள் கழித்துத் தமிழின் குழந்தை கண் விழித்தது. தமிழோ ஆதிக்குக் கோயிலே கட்டித் தொழலாம் என்ற மனநிலையில் அவனைத் தேட, ப்ரியா "ஆதி இன்னிக்கு வரலையே chief" என்றாள்.
தமிழ் ஆதியின் போனுக்குத் தொடர்பு கொண்டார். அதுவும் அணைத்து வைக்கப் பட்டிருந்தது. இரு நாட்கள் அப்படியே போக, மூன்றாம் நாள் தமிழும், ப்ரியாவும் ஆதியின் வீட்டுக்கே சென்றனர்.
வெகு நேரம் கதவைத் தட்டியும் திறப்பதற்கு எந்த அறிகுறியும் இல்லாததால், சாளரம் வழியே ஏறி வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்த தமிழ், தன் கண்ணை நம்ப முடியாதவராய் நின்றார். வீட்டின் வரவேற்பறையின் நடுவே கண்ணை மூடியவனாய் சுற்றி நிகழ்வது என்னவென்றே அறியாதவனாய் அமர்ந்திருந்தான் ஆதி. முழு உடலும் சிலையாய் இருப்பது போல் இருக்க, முகத்தில் மட்டும் மகிழ்வு நிறைந்திருப்பது போல ஒளிர்ந்தது.
தமிழ் வெளிக்கதவைத் திறந்து விட, ப்ரியா தமிழின் முகத்தில் இருந்த வியப்பையும், அதிர்ச்சியையும் பார்த்தவளாய், "என்ன ஆச்சு சார்?" என்றாள்.
"நீயே உள்ள வந்து பாரு, ப்ரியா" என்றவாறு கதவை நன்கு திறக்க, உள்ளே வந்து பார்த்த ப்ரியாவும் ஆதியின் தவக்கோலத்தைப் பார்த்தவளாய்த் திடுக்கிட்டு நின்றாள்.
"அச்சோ… என்னாச்சு சார் இவருக்கு?" என்று கேட்ட ப்ரியாவின் குரலில் ஏமாற்றம் மிகுந்திருந்தது.
ஒன்றும் பேசாமல் தலையை ஆட்டியபடி, கைகளைக் கட்டியபடி நின்றார் தமிழ்.
"மூனு நாளா ஆஸ்பிடல் வரல. இவ்ளோ நேரம் கதவைத் தட்டுறோம். திறக்கல. போன் எடுக்கல. உள்ள வந்து பாத்தா, இப்படி உட்காந்திருக்கான், டேய் ஆதி" என்ற ப்ரியாவைத் தமிழ் தடுக்க நினைத்த நேரம், ஆதி தன் கண்களைத் திறந்து பார்த்தான்.
உறைந்து நிற்கும் இருவரையும் பார்த்துச் சிரித்தவன், எழுந்து தனது அறைக்குள் சென்று குளித்து விட்டு வந்தான்.
"என்ன வந்து ரொம்ப நேரமாச்சா? தமிழ், குழந்தை கண் விழிச்சுட்டானா? ப்ரியா, வேற ஏதாவது serious case வந்துச்சா?" என்று ஏதும் நடக்காதவன் போலப் பேசத் தொடங்கினான்.
ப்ரியா, முகம் கடுத்தவளாய் நின்றிருக்க, தமிழ் ஆதியின் அருகே வந்தமர்ந்து, "ஆதி, நீங்க மூனு நாளாக யார் கூடவும் தொடர்பு கொள்ளல, ஆஸ்பிடல் வரல, போன் எடுக்கல, நாங்க பயந்து வந்து இங்க பாத்தா, சாமியார் மாதிரி உக்காந்திருக்க, என்ன ஆச்சு ஆதி?" என்று பொறுமையாகக் கேட்டார்.
"அதான் நீங்களே சொன்னீங்களே, அதே தான், மனதோட உள்முகப் பயணத்துல ஆழ்ந்து கிடந்த எனக்கு காலநேரக் கட்டுக்கள் எல்லாம் என்னென்னே மறந்துடுச்சு" என்று சொல்லியவன், "சரி, அத விடுங்க தமிழ், ஒரு கால் மணி நேரம் இருங்க. கிளம்பிடலாம்" என்று மீண்டும் கிளம்பத் துவங்கினான்.
தமிழ், ப்ரியாவைப் பார்த்தார். ப்ரியா ஆதி அமர்ந்திருந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் முகம் ஏமாற்றத்தைப் பூசி இருந்தது.
சற்று நேரத்தில் மூவரும் மருத்துவமனைக்குக் கிளம்பினர். தமிழ் தனது பைக்கில் ஏறிக் கொள்ள, ப்ரியா ஆதியின் காரில் ஏறிக் கொண்டாள். தமிழ் முன்னே செல்ல, ஆதியின் கார் பின் தொடர்ந்து சாலையின் போக்கில் கலந்தது.
ப்ரியா உள்ளூறும் உணர்வுகளை முகத்தில் மறைக்கும் முயல்வில் அவளிடமே தோற்றுக் கொண்டிருந்தவளாய், ஆதியை வெற்றுப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். சாலையின் மீதே கவனமாய் ஓட்டிக் கொண்டிருந்த ஆதியின் மீது கோபமும் வந்தது. கல்லூரியில் நாம் கண்டுகொள்ளாத ஆதியின் மீது ஏன் நமக்குக் கோபம் என்ற எண்ணமும் தோன்றி மறைந்தது.
"ப்ரியா..." என்ற ஆதியின் குரல் கேட்டு நிகழுலகிற்கு வந்தவளாய்த் திடுக்கிட்டு, "ம்ம்..." என்றாள் ப்ரியா.
"வந்துட்டோம். இறங்கிக்கோங்க, நான் நிறுத்திட்டு வந்திடுறேன்" என்றான் ஆதி.
தமிழ் ஏற்கனவே மருத்துவமனை வந்து சேர்ந்திருந்தான். ப்ரியா மருத்துவமனைக்குள் நுழைந்து, குழந்தை நலப்பிரிவிற்குச் செல்லும் வழியில் தமிழ் Dean அறையில் இருந்து வருவதைக் கண்டாள்.
"டாக்டர், டீன் கிட்ட சொல்லிட்டீங்களா?" என்றாள் ப்ரியா.
"சொல்லித்தானே ஆகணும். ஆதி எங்க?" என்று தமிழ் கேட்க, உள்ளே வந்த ஆதி, நேரே டீன் அறைக்குச் சென்றான்.
"டாக்டர், ப்ளீஸ் நீங்களும் கொஞ்சம் வாங்களேன். உள்ளே என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியணும்." என்றாள் ப்ரியா.
சற்று யோசித்தவராய், "ம்ம்ம், சரி, வாங்க" என்றவராய் தமிழ் முன்னே செல்ல, ப்ரியாவும் டீன் அறைக்குள் நுழைந்த போது, டீன் ஆதியிடம் இருந்து கடிதம் இருந்த ஒரு உறையை வாங்கிக் கொண்டிருந்தார்.
Dean, "நல்லா ஒரு தடவைக்குப் பலமுறை யோசிச்சுக்கோ, ஆதி. இது வெறும் letter தான். இந்த வாழ்க்கையில நீ என்னவாகணும்னு உனக்காக வேற யாரும் முடிவெடுக்க முடியாது. ஆனா, நல்லா யோசிச்சு முடிவெடுக்கச் சொல்றேன்" என்று சொல்ல, ப்ரியாவும், தமிழும் ஆதியின் இந்த முடிவை எதிர்பாராதவர்களாய் நின்றிருந்தனர்.
எழுந்து deanடம் கை கொடுத்து விட்டு, புன்னகை பூத்தவனாய் ஆதி குழந்தைகள் நலப்பிரிவு நோக்கி நடந்தான்.
அதுவரை அமைதியாக இருந்த ப்ரியா “ஆதி. நீங்க என்ன பண்ணிட்ருக்கீங்கன்னு தெரியுமா?” என்று கடுகடுத்தாள்.
புன்னகை மாறாத ஆதி” ஆமா ப்ரியா. எனக்கு இந்த வேலையை விட என் மன அமைதி முக்கியமாப் படுது. அதனாலதான் வேலையை விட்டுடலாம்னு லெட்டர் கொடுத்தேன்.” என்று நிதானித்தான்.
“உன் கூடப் படிக்கும்போது உன்னைப் பத்தி நான் பெருசா எடுத்துக்கிட்டதே இல்ல. ஆனா இங்க உன்னப் பாத்தப்றம் தான் இப்டி ஒரு நல்ல பையனைப் பத்தித் தெரிஞ்சுக்கம விட்டுட்டமேன்னு நம்ம பேட்ச் மேட்கிட்டப் புலம்பிட்ருந்தேன். அப்ப அவ ஒரு விஷயம் சொன்னா. ஆமா நீ ஏன் கறி சாப்டறதே இல்ல. அதுக்கு நீ சொன்ன காரணம் ஞாபகமிருக்கா?” என்று கேட்டாள்.
எந்தப் பதிலும் கூறாமல் நினைவில் மூழ்கினான் ஆதி.
-------------------------------------------------------------------
கல்லூரியில் படிக்கும் போது ஆதி கண்ணாடி அணிந்து மிகவும் அமைதியான பையனாக இருப்பான். பெரும்பாலும், பலருடன் பேசத் தயங்குவான். ஆம் இல்லை என்று மட்டும் பதில்கள் இருக்கும். படிப்பில் மட்டும் கெட்டி.
யாரேனும் ஐயமென்று வந்தால், ஆதி விளக்கம் கொடுப்பதைக் கேட்க கூட்டமே கூடி விடும். கல்லூரி வாழ்வில் பலரும் சந்திக்கும் சிக்கல்கள் ஆதிக்கும் நடந்தன. அதில் பெரும் சிக்கலாக இருந்தது, அவனுடைய உணவுப் பழக்கம். கல்லூரியிலேயே உணவில் அசைவம் சாப்பிடாத ஒரே ஆள் இவன் தான். முதல் ஆண்டு ragging துவங்கி, கல்லூரி விடுதி உணவகம் வரையிலும் அசைவ உணவு சாப்பிடாதது அவனுக்குப் பெரும் இடராகவே தொடர்ந்தது.
எப்போதும் அமைதியாக, எதிர்த்துப் பேசாமல், சண்டையிடாமல் இருப்பவன் என்றால் கேட்க வேண்டுமா?
"தம்பி, நல்ல புள்ளயா இந்த சிக்கனைச் சாப்பிடுவியாம்" என்று அவன் முன் வந்து நின்ற சீனியர் சொல்ல, அவனது தட்டில் விழுந்தது chicken leg piece. அன்று எதுவும் சாப்பிடாமல் எழுந்து சென்றான். இதே நிலை பல நாட்கள் தொடர்ந்திருக்கின்றன. இந்த நிகழ்ச்சி அவன் மனதில் மிகப்பெரிய உறுதியாகவே மாறிவிட்டது. அவனை யாராலும் அசைவம் சாப்பிடவைக்கவும் முடியவில்லை. அமைதியானவனாக இருந்தபோதிலும் உறுதியானவனாக இருந்தான்.
இதை எல்லாம் கண்ட இன்னொரு சீனியர் அவனுக்குத் தினமும் வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து கொடுப்பார். சிலரின் பொறாமையும், இகழ்தலும் அவனைச் சூழ்ந்த நேரத்தில் பலரின் அன்பும், ஆதரவும் அவனைக் காப்பாற்றத் தவறவில்லை.
கல்லூரியில் ஆதியின் பெயரே நல்லவன் என்று ஆகியிருந்தது. இவன் அசைவம் சாப்பிடாததும், யாருக்கும் கெடுதல் நினைக்க மாட்டான் என்பதும், தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வான் என்பதும் அனைவருக்கும் தெரிந்திருந்தது.
ஒரு நாள் அவனுடைய நண்பன் செல்வன் கேட்டான், "ஏன்டா ஆதி, நீ தான் அசைவமே சாப்பிட மாட்டுற? அப்புறம் எப்படிடா கத்தி பிடிச்சு, தோலைக் கிழிப்ப, ரத்தம் தையல்லாம் எப்படி சமாளிப்ப?"
ஆதி சிரித்துக் கொண்டே, "நான் கத்தி எடுத்து அறுக்குறதுக்கு வேறுபாடு இருக்கே? இன்னொரு உயிரைக் கொன்னு திங்குறதுக்கு என் மனசு இடம் கொடுக்க மாட்டேங்குது. ஆனா, நான் அந்த உயிரைக் காப்பாத்துறதுக்காகத் தானே கத்திய எடுக்குறேன். வேணும்னா பாரு" என்று சொல்லியபடி, surgical knife எடுத்து, அந்த specimenஐ நேராக, பொறுமையாக, மெதுவாகக் கிழித்துக் காண்பித்தான். வியந்து போனான் செல்வா.
-------------------------------------------------------------------
நினைவுகளிலிருந்து விடுபட்ட ஆதி ப்ரியாவிடம் எதுவும் கூறாமல் உள் நோயாளிகளைப் பார்வையிடச் சென்றபோது, இன்னும் மூன்று மாதங்களில் பணியை விட்டுச் செல்லவிருக்கிறான் என்று கேள்விப்பட்ட குழந்தைகளும், அவர்களின் பெற்றோரும், ஆதியைச் சூழ்ந்து கொண்டனர்.
“டாக்டர் தம்பி, போன வாரம் நீங்க செஞ்ச ஆபரேஷனால தான் இதோ என் பொண்ணு உசுரோட இருக்கு, இதைப் போல எத்தனை பேருக்கு உங்க உதவி தேவைப்படும், நெனச்சுப் பாருங்க” என்றார் கையெடுத்து வணங்கிய ஒரு தந்தை..
"டாக்டர் தம்பி, நீங்க போனா, இந்த இடத்துக்கு இன்னும் பல டாக்டர் வரலாம். ஆனா, ஆதி டாக்டர் போல கைராசி வருமா? நீங்க தர்றது போல நம்பிக்கை யாரு தருவாங்க?" எனப் பலரும் கூற, மூன்று வயதான குழந்தை ஒன்று ஆதியின் கன்னத்தில் முத்தமிட்டது.
-------------------------------------------------------------------
"ஹாஹா, நீ எப்படியும் இந்த லெட்டரைத் திருப்பி வாங்கிடுவன்னு எனக்குத் தெரியும்" என்ற dean தொடர்ந்தார்.
"ஆதி, நீ இன்னும் காப்பாத்த வேண்டிய உயிர்கள் நிறைய இருக்குப்பா. அவ்ளோ எளிதா தப்பிச்சுக்கலாம்னு நெனச்சியா? உன்ன விடுறதா இல்ல,"
ஆமென்பது போலத் தலையசைத்த ஆதி, "வாழ்க்கையோட பொருள் என்னென்னன்னு உள்ளே தேடிக் கண்டுபிடிச்சுட்டேன்னு மனசுல நெனச்சுட்டிருந்த நேரம், உடம்பை அறுத்து ரத்தத்தைப் பாக்கற வேலையைத்தான் செய்யப்போறோம்னு தெரிஞ்சுதான் படிக்கவந்தேன். ஆனாலும் நான் அசைவம் சாப்பிட்டதே இல்ல. ஏன்னா இரண்டுக்குமான வேறுபாடு தெரிஞ்சிருந்தது. நான் அசைவம் சாப்பிடாததால அதற்கான சூழ்நிலை பல வந்தப்பவும் நான் சாப்பிடாம சரியான காரணத்தோட அதை மறுத்ததால வந்த நம்பிக்கை என் கூடவே வந்தது. அதுவே எனக்கு ஒரு பலமா இருந்தது. இப்பவரை இருக்கு. அதுபோலத்தான் இப்ப என்னோட மனத் தேடலும். தனிமையில நான் என்னைத் தேடுறதைவிட என்னைச் சுத்தி எத்தனை பேர் இருந்தாலும் எனககு இந்தக் குழந்தைகளோட அன்பும், எனக்கான இவர்களின் தேவையும் தான் அந்த வாழ்க்கையின் பொருள் அதுதான் என்னோட உள்ளத்தேடல்ன்னு இப்ப என் மனசு .சொல்லுது.
உயிரைக் கொன்னு சாப்பிடாம இருக்கறது மட்டுமல்ல. உயிரைக் காப்பாத்துறதும் என கடமைதான்னு புரிஞ்சுடுச்சுங்க சார்" என்று சொல்ல அருகே நின்ற தமிழ், ப்ரியாவின் கண்களைப் பார்க்க, அவள் கண்களில் மகிழ்ச்சி ஒளியாய் மிளிர்ந்தது.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
குறள் விளக்கம்:
ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
- தமிழ்
Comments
Post a Comment